திருவலம் பொன்னையாறு இரும்பு பாலத்தில் பைக், கார் செல்ல அனுமதி-கனரக வாகனங்களுக்கு தடை நீடிப்பு

திருவலம் : திருவலம் பொன்னையாற்று இரும்பு பாலத்தில் கார், பைக்   போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகம் மற்றும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பொன்னையாற்றில் ஆந்திராவில் பெய்யும் மழை நீரானது வரப்பெறும்.

இப்பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரா இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் பொன்னையாற்றில் வெள்ள நீரானது கடந்த 19ம் தேதி அதிகாலை முதல் ஆற்றின் இருக்கரைகளையும் தொட்டப்படி முழு கொள்ளளவு நிரம்பி பெரும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு இரும்பு பாலத்தினை தொடும் நிலையில் சென்று கொண்டிருந்தது.

இதனையடுத்து இரும்பு பாலம் ஏற்கனவே வலு விழந்துள்ளதாலும், ஆற்றில் வரும் பெரும் வெள்ளநீரினால் பாலத்தின் அடிப்பகுதி மணல் அரிக்கப்பட்டு வந்ததாலும் கடந்த 20ம் தேதி நெடுஞ்சாலைதுறை காட்பாடி கோட்ட உதவி செயற்பொறியாளர் சுகந்தி தலைமையிலான நெடுஞ்சாலை துறையினர் மற்றும் திருவலம், சிப்காட் போலீசார் பாலத்தில் ஆய்வு செய்து அன்றைய தினம் முதல் அனைத்து போக்குவரத்திற்கும் தடைசெய்யப்பட்டு போலீஸ் பேரிகாட் அமைக்கப்பட்டு அறிவிப்பு பேனரும் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அனைத்து வாகனங்களும் சென்னை- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலை பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டு பயன்படுத்தி வந்தனர். இதனால் திருவலம், கெம்பராஜபுரம், குப்பத்தமோட்டூர், அம்முண்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரம், பெல், சிப்காட், லாலாபேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு பல்வேறு வாகனங்களில் கம்பெனிகள், கல்லூரி, பள்ளி மற்றும் பலவித பணிகளுக்கு சென்று வருபவர்கள் சுமார் 3 கி.மீ சுற்றி சென்று வருவதால் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த 21, 25ம் தேதிகளில் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து காட்பாடி நெடுஞ்சாலை துறையினர் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரும்பு பாலத்தில் கார், பைக் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளித்து பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், கனரக வாகனங்களுக்கு உள்ளிட்டவைகளுக்கு தடை மீண்டும் நீடித்து வருகிறது. எனவே பாலத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: