×

அமராவதி அணையில் இருந்து கீழ்மதகு வழியாக 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்..!

உடுமலை: அமராவதி அணையில் இருந்து கீழ்மதகு வழியாக ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதவிர, கல்லாபுரம், ராமகுளம் நேரடி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்ததால் அமராவதி அணை நிரம்பியது. கடந்த சில மாதங்களாக அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக இன்று (6ம் தேதி) அதிகாலை அணைக்கு நீர்வரத்து 3,100 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் 87.60 அடியாக உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி, கீழ்மதகு வழியாக ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஏற்கனவே, இந்த ஆண்டு 6 முறை உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 7வது முறையாக உபரிநீர் திறக்கப்பட்டது.


Tags : Amravati Dam , Amaravati Dam
× RELATED 7 முறை உபரிநீர் திறந்து விடப்பட்டும்...