×

கடன் தொல்லையால் மன உளைச்சல்: மகனை கொன்று தம்பதி தற்கொலை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜா(38). ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவரது மனைவி கனகதுர்கா(33). இவர்களது மகன் ஸ்ரீவத்சன்(11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில மாதங்களாக ரியல் எஸ்டேட் தொழிலில் ராஜாவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல பேரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். ஆனால் கடன் வாங்கியவர்களுக்கு சொன்னபடி ராஜாவால் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால்  கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதனால் கடந்த ஒரு மாதமாகவே ராஜா மற்றும் அவரது மனைவி  மன உளைச்சலில் இருந்து வந்தனர். நேற்று இரவு ராஜா குடும்பத்தினர் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். இன்று காலை வெகுநேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியேயும் யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த  அக்கம்பக்கத்தினர் ராஜா வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து தட்டியும் கதவை திறக்காததால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜா, கனகதுர்கா ஆகியோர் அறையில் தூக்கில் தொங்கினர்.  அருகில் ஷோபாவில் சிறுவன் ஸ்ரீவத்ஷன் இறந்து கிடந்தார். ஆனால் அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. இதையடுத்து ராஜா, கனகதுர்கா, ஸ்ரீவத்சன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் முதல்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் மகன் வத்சனை கொலை செய்து விட்டு தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தம்பதி மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தார்களா அல்லது விஷம் கொடுத்து கொலை செய்தார்களா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இவர்களது இந்த முடிவுக்கு  கடன் தொல்லை தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Couple commits suicide by killing son
× RELATED விருத்தாசலம் அருகே பரிதாபம் உணவு சாப்பிட்ட தம்பதி பலி