ஒடுகத்தூர் அருகே தார் சாலையில் திடீர் பள்ளம்-போக்குவரத்துக்கு தடை

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை, நாயக்கனூர், பாலம்பட்டு, சின்னூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தினமும் கே.ஜி. ஏரியூர் அருகே உள்ள வி.கே.தாமோதர நகர் வழியாக ஒடுகத்தூருக்கு சென்று வருகின்றனர். இதற்காக, அப்பகுதியில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது.

தொடர் மழையால் வி.கே. தாமோதர நகர் பகுதி தார் சாலையில் நேற்றுமுன்தினம் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் ஆட்டோ, கார், லாரி மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாக இரவு நேரங்களில் 4 சக்கர வாகனங்கள் செல்லாதபடி அப்பகுதி மக்கள் முள்வேலி அமைத்துள்ளனர்.

தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்கிறது. எனவே ஆபத்தான நிலையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்து போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More