செய்யாறு அருகே 15 ஆண்டுகளாக அவலம் சாலையின் சேற்றில் சிரமத்துடன் நடந்து செல்லும் மாணவர்கள்-சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

செய்யாறு : செய்யாறு அருகே 15 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள பெருமாந்தாங்கல் ஊராட்சி மேட்டுக்குடிசை கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருமாந்தாங்கல் கிராமத்திலிருந்து மேட்டுக்குடிசைக்கு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தார் சாலையானது கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலை அடையாளமே தெரியாமல் குண்டும், குழியுமாக மண் சாலையாக மாறியது. தற்போது பெய்த கனமழை காரணமாக சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

இதனால் இந்த சாலையில் விவசாயிகள், இருசக்கர வாகனங்களில் இடுபொருட்கள், வேளாண்பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. தங்கள் கிராமத்திலிருந்து பெருமாந்தாங்கல் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு 2 கிலோ மீட்டர் தூர சகதி சாலையில் செருப்பு கூட அணியாமல் நடந்தே செல்கின்றனர். அதேபோல் சிப்காட் தொழிற்பேட்டைக்கு கம்பெனி பஸ்சில் செல்வதற்காக செல்லும் பெண்களும்  அச்சத்துடனே பயணிக்கின்றனர்.

இந்த சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்  சாலையோரத்தில் ஜல்லிக்கற்களை கொண்டு வந்து கொட்டினர். அப்போது கிராம தொடக்கத்தில் இருந்து 200 மீட்டர் தூரமும், மேட்டுக்குடிசை கிராம பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரம் மட்டுமே தார் சாலை அமைத்தனர். இடைப்பட்ட பகுதியில்  சாலையை புதுப்பிக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அந்த 200 மீட்டர் தார் சாலையும் ஜல்லிகள் பெயர்ந்து சிதறிக்கிடக்கிறது. இச்சாலையை சீரமைத்து தரக்கோரி  ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை வேண்டுகோள் வைத்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. சாலையில் தெரு விளக்குகூட அமைக்கப்படாததால் இருட்டில் தவிப்பதாகவும், அடிப்படை வசதியின்றி தனித்தீவுபோல மாறிய தங்கள் பகுதி மக்களின் 15 ஆண்டுகால  கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More