சீனிவாசபுரம் ரயில்வே தரை மட்ட பாலம் சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதி-முழுமையாக சீரமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி மீன்கரை ரோடு சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலம் அடிக்கடி ஏற்படும் சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி மீன்கரை ரோடு சீனிவாசபுரம் வழியாக வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக, அங்குள்ள  ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் கீழ், தரை மட்ட பாலம் கட்டுமான பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு  முன்பு நடைபெற்றது.

ஆனால், தரைமட்ட பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரோடு முறையாக சீரமைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதன் ஒருபகுதியில் அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தது.அதனை அவ்வப்போது சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டாலும், முழுமையாக பயனில்லாமல் மீண்டும், மீண்டும் சேதமாவது தொடர் கதையாக உள்ளது.

சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, சேதமான ஒரு பகுதியை பெயர்த்து புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இருப்பினும், அதன் உறுதி தன்மை நீடிக்காமல் பெயர்ந்து வர ஆரம்பித்துள்ளது. தற்போது, பல்வேறு இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதுடன், இரும்பு கம்பிகள் தாறுமாறாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும் நேரத்தில் அச்சமடைகின்றனர்.

இந்த வழித்தடம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரள பகுதியிலிருந்தும் வந்து செல்லும் பிரதான சாலையாக  உள்ளது. இந்த வழியாக பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து தொடர்ந்துள்ளது.அண்மையில், அடிக்கடி மழை இருந்ததால், சேதமடைந்து பிளவு ஏற்பட்ட பகுதி, நாள் போக்கில் பெரிய அளவில் குழியாக மாறியுள்ளது. . எனவே, வாகன போக்குவரத்து மிகுந்த, சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலத்தில்  உள்ள ரோட்டில் ஏற்பட்ட சேத பகுதியை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க எடுத்து, விபத்தை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More