ரியல் எஸ்டேட் அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 2 மாதமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த சிறுவன், வாலிபர் கைது

புதுச்சேரி : புதுவை கோரிமேட்டில் ரியல் எஸ்டேட் அதிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுவை சண்முகாபுரம் மாணிக்கசெட்டியார் நகரை சேர்ந்தவர் வீரமணி (52). ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். மேலும், வட்டி தொழிலும் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 15ம் தேதி இரவு 8 மணியளவில் கோரிமேடு போலீஸ் குடியிருப்பு துப்பாக்கி சுடும் பயிற்சி களம் பின்புறம் உள்ள பனை மரத்தின் அருகே அமர்ந்து தனியாக மது குடித்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் வீரமணியின் பின்பக்க தலையில் சரமாரி கத்தியால் வெட்டியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்து திடுக்கிட்டு, இதுபற்றி கோரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய வீரமணியை மீட்டு ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அவர், 10 நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். குற்றவாளிகளை பற்றி எந்த தடயங்களும் சிக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.இந்த நிலையில் 2 மாதத்திற்குப் பிறகு குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர். சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்த ஹரிஷ் (20) மற்றும் 16 வயது சிறுவன் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. ஹரிஷும், அவரது 16 வயது நண்பரும் சம்பவ இடத்தில் மது அருந்துவது வழக்கம். கஞ்சாவும் அவ்வப்போது குடித்து வந்துள்ளார். இதனை வீரமணி தட்டிக்கேட்டு அடிக்கடி விரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர்கள், அரிவாளால் வெட்டி தலைமறைவாகினர். இதையடுத்து ஹரிஷ் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: