×

பெண்களை தொழில்முனைவோராக உருவாக்க 100 சதவீத மானியத்தில் ஆடுகள்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்க 100 சதவீத மானியத்தில்  ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை. ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கி, அவர் தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலா ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பேர் வீதம் (காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர்) 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 500 பேருக்கு வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் கொள்முதல் செய்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற வறுமை கோட்டுக்கு கீழான ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களாக இருக்க வேண்டும்.  18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். பயனாளி மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிய கூடாது. கிராமத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருக்க வேண்டும்.  நிலமற்ற வேளாண் பெண் பணியாளராக இருக்க வேண்டும். சொந்தமாக ஆடுகள் மற்றும் மாடுகள் வைத்திருக்க கூடாது. இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள், கோழி வளர்ப்பு திட்டங்களில் பயனடைந்தவராகவும், சொந்தமாக ஆடுகள் வைத்திருப்பவராகவும் இருக்கக்கூடாது. இதில் பயனடைய விரும்பும் பெண்கள், விண்ணப்பங்களை அருகிலுள்ள கால்நடை நிலையங்களில் பெற்று வரும் 9ம் தேதிக்குள், அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Woman, Entrepreneur, Grant, Collector
× RELATED சிவகாசி அருகே செங்கமலபட்டியில் வெடி...