வினாடி - வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு பாராட்டு

திருவள்ளூர்: தமிழக அரசு சார்பில் மாநில அளவில் இணையதளம் வாயிலாக வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 89 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவ, மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் திருவள்ளூர் மாவட்டம் வடகரை ஆதிதிராவிடர் நலத்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி சங்கீதாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 89 மாணவ, மாணவிகளும் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் உள்ள துபாய் நகரத்திற்கு கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சரவணன் தலைமையில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வடகரை, ஆதிதிராவிடர் நலத்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி சங்கீதாவை நேரில் அழைத்து பாராட்டி புத்தகம் மற்றும் பரிசு வழங்கினார்.

தொடர்ந்து தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட கிளை சார்பில் மாவட்டத் தலைவர் திருக்குமரன் மாணவி சங்கீதாவிற்கு ₹5 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியின்போது சென்னை மாவட்ட தலைவர் தாமஸ், மாநில துணைத்தலைவர் மோகன், மாவட்ட பொருளாளர் சங்கரலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் பிரசாத், ஆசிரியர் செவ்வை ஜெகதீசன், வடகரை சுரேஷ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உடனிருந்தனர்.  

Related Stories: