எனக்கு நீதி வழங்குங்கள்: பாக்.கில் கொல்லப்பட்ட குமாரா மனைவி கதறல்

கொழும்பு: ‘எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நீதி வழங்குங்கள்,’ என்று பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட குமாராவின் மனைவி கதறியுள்ளார்.  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியல்கோட்டில், தனியார் ஆடை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியவர் இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமாரா தியவதனா (40). இரு தினங்களுக்கு முன் தனது தொழிற்சாலையின் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டதற்காக அப்பகுதியை சேர்ந்த பெரிய கும்பல் அவரை கொடூரமாக தாக்கி, உயிருடன் எரித்து கொன்றது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 800 பேர் மீது பாகிஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 118 பேரை கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள மத தீவிரவாத கட்சியான, ‘தெஹ்ரிக் இ லப்பைக் பாகிஸ்தான்’ என்ற கட்சியை சேர்ந்தவர்கள், இந்த கொடூர செயலை செய்துள்ளனர். இலங்கையின் கனிமுல்லா என்ற இடத்தில், குமாராவின் மனைவி, தனது 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். தொலைக்காட்சி செய்திகள் மூலமாகவே தனது கணவர் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவர், கதறி அழுதார். ‘‘எனது கணவர் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார். அவரை கொன்றவர்கள் மீது பாகிஸ்தான், இலங்கை அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், என் பிள்ளைகளுக்கும், கணவருக்கும் நீதி வழங்க வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஞ்சிய உடல் பாகம் விமானத்தில் வருகை

பாகிஸ்தானில் உள்ள இலங்கை தூதரான மோகன் விஜேவிக்ரமா கூறுகையில், ‘‘எரித்து கொல்லப்பட்ட குமாராவின் எஞ்சிய உடல் பாகங்கள், சிறப்பு விமானம் மூலமாக லாகூரில் இருந்து இலங்கைக்கு நாளை (இன்று) எடுத்து செல்லப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்,’’ என்றார்.

மொத்த எலும்பும் உடைப்பு

* கொல்லப்பட்ட குமாராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது.

* அதில், கொடூர கும்பல் தாக்கியதால் அவருடைய உடலில் உள்ள ஒரு பாதத்தை தவிர, மற்ற அனைத்து எலும்புகளும் உடைந்துள்ளன.

* முதுகு எலும்பு 3 துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.

* உடலும் 99 சதவீதம் தீயில் எரிந்து விட்டது.

* மண்டை ஓடும். தாடை எலும்பு நொறுக்கப்பட்டதும்தான் சாவுக்கு காரணமாகி உள்ளது.

* சிறுநீரகம், கல்லீரல், வயிற்றுப் பகுதி, குடல் உறுப்புகள் உள்ளிட்ட முக்கிய உடல் உள்ளுறுப்புகள் சேதமாகி உள்ளன.

* சித்ரவதை செய்யப்பட்டதற்கான காயங்கள், உடல் முழுவதும் ஏற்பட்டுள்ளன.

Related Stories: