உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு: அமித்ஷா தகவல்

ஜெய்சல்மர்: ‘உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் பாதுகாப்பு படைக்கு விரைவில் வழங்கப்படும்,’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ‘பிஎஸ்எப்’ எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் 57வது உதய தினம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று, பிஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: ஒரு நாடு பாதுாப்பாக இருந்தால்தான் அது வளம் பெற்று, முன்னேறிச் செல்ல முடியும். நாட்டின் பாதுகாப்பை நீங்கள் (பிஎஸ்எப்) உறுதி செய்கிறீர்கள்.

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பிஎஸ்எப்.பின் சேவை என்றென்றும் நினைவு கூரப்படும். பிஎஸ்எப் படைக்கு உலகின் சிறந்த தொழில்நுட்பங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும். தற்போது, எல்லையில் டிரோன் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, டிரோன்களுக்கு எதிரான தொழில்நுட்பத்தை பிஎஸ்எப், டிஆர்டிஓ மற்றும் என்எஸ்ஜி ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. உள்நாட்டு தொழில்நுட்ப வசதியுடன் விரைவில் அதனை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, நமது எல்லைக்குள் ஊடுருபவர்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படுகிறது. நமது எல்லைகளையும், வீரர்களையும் யாரும் சாதாரணமாக எடுத்து கொள்ள அனுமதிக்க முடியாது. உரி மற்றும் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு சர்ஜிக்கல் மற்றும் விமானப்படை தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Related Stories:

More