ஒமிக்ரான் வைரஸ் நல்லதா? கெட்டதா?..இதுவரை ஒரு பலியும் இல்லை; மோசமான பாதிப்பும் இல்லை

புதுடெல்லி: ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு ஒரு மாதம் நெருங்கி விட்ட நிலையிலும், பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், இந்த வைரஸ் நிஜமாகவே கொடூரமானது தானா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. கொரோனா வைரஸ் மீதிருந்த பயம் முற்றிலும் விலகிய நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் எனும் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இது டெல்டாவை விட அதிகமான, 50 பிறழ்வுகளை கொண்டிருப்பதாக தென் ஆப்ரிக்கா கூறியதும், உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பீதி தொற்றியது. ஒமிக்ரான் மிக அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்ததும் பல நாடுகள் விமான நிலையங்களையும், எல்லைகளையும் மூடின. கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும்,இந்தியா உட்பட 40 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் கண்டு பிடிக்கும் முன்பாகவே, கடந்த மாதம் 11ம் தேதியே நெதர்லாந்தில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம், ஒமிக்ரான் கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கி விட்ட போதிலும், இதுவரையிலும் அது எந்த நாட்டிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டெல்டா வைரசை போல ஆக்சிஜன் பாதிப்பு போன்ற பெரிய அறிகுறிகளும் இல்லை. சாதாரண பருவகால தொற்றுக்கு இணையான அறிகுறிகளை மட்டுமே கொண்டுள்ளது. மேலும், இதில் பாதிப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சையின்றியே குணமாகி வருகின்றனர்.

மற்ற கொரோனா வகைகளை விட ஒமிக்ரான் மிகத் தீவிரமானது என்பதற்கு தற்போதைக்கு எந்த ஆதராமும் இல்லை என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

மேலும், ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவுமா? தடுப்பூசி பாதுகாப்பை மீறி தொற்றுமா?, உயிர் பலி ஏற்படுத்துமா? என்பதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதே போல், உலக சுகாதார நிறுவனமும், ஆரம்பக்கட்ட தகவலின் அடிப்படையிலேயே ஒமிக்ரான் கவலை தரும் வைரசாக வகைப்படுத்தப்பட்டதாக கூறி உள்ளது. இது, தடுப்பூசிகளை தாண்டி தொற்றுமா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி வருகிறது. அதோடு, பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கூறுகிறது.

‘ஒமிக்ரான் வைரசால் எந்த தீவிர பாதிப்பும் ஏற்படாது, இந்த வைரஸ் தொற்றால் உடலில் புதிய வகை வைரசிடமிருந்து தப்புவதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும், எனவே, பயப்பட வேண்டியதில்லை,’ என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, ஒமிக்ரானின் உண்மையான முகம் தெரிய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என தெரிகிறது. அதன் பிறகே ஒமிக்ரான் நிஜமாகவே கொடூரமான வைரசா அல்லது ஒன்றுமில்லாத வைரசா என்பது வெளிச்சத்துக்கு வரும் என்றும் கூறுகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேறு சிலருக்கு பரவியது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்றுள்ளவர்கள் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் 3வது அலை?..தினமும் 1.5 லட்சம் பாதிப்பு

கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணிந்திர அகர்வால் அளித்த பேட்டியில், ‘தென் ஆப்ரிக்கா மற்றும் பிற நாடுகளின் கொரோனா தரவுகளை ஆய்வு செய்த போது, புதியதாக பரவிவரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றானது டெல்டா வைரசை காட்டிலும் இரண்டு மடங்கு வேகமாக பரவுகிறது. உலக சுகாதார நிறுவனம் ஒமிக்ரான் வைரசை, மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் மாறுபாடு என்ற பிரிவில் வைத்துள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம் ெகாரோனாவின் மூன்றாவது அலை ஏற்படலாம். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் உச்சகட்ட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 1.5 லட்சம் வரை செல்லலாம். ஒமிக்ரான் வைரஸ் தற்போது மெதுவாக பரவுகிறது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: