ஏழுமலையானை தரிசிக்க சென்ற போது பயங்கரம் தடுப்புச் சுவரில் கார் மோதி குழந்தை உட்பட 6 பேர் பலி: 3 பேர் படுகாயம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்றபோது தடுப்புச்சுவர் மீது கார் மோதி குழந்தை உட்பட 6 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் ஐத்தேப்பள்ளி கிராமத்தில்   பூதலப்பட்டு- நாயுடு பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் நேற்று மாலை 4.30 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில், ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். காரில் இருந்த சடலங்கள், காயமடைந்தவர்களையும் பொதுமக்கள் மீட்டதும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் கிடைத்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், விஜயநகர் மாவட்டம், தேராபுரம் கிராமம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேடமர்த்தி கிராமத்தை சேர்ந்த 2 குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் திருப்பதி வந்துள்ளனர். காரை டிரைவர் ராமமூர்த்தி ஓட்டியுள்ளார். அப்போதுதான், கார் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

Related Stories: