உபி சட்டப்பேரவை தேர்தலில் புது யுக்தி அப்துல் கலாம் படத்தை வைத்து ஓட்டு கேட்கும் அகிலேஷ் யாதவ்: முஸ்லிம்களை கவர முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் படத்தை போட்டு ஓட்டு கேட்டு வருகிறார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், 2வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜ ஈடுபட்டுள்ளது. அதேபோல், இழந்த ஆட்சியை பிடிப்பதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஊர் ஊராக சென்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார்.

 ‘சமாஜ்வாடி வெற்றி யாத்திரை’ என்ற பெயரில் நடக்கும் இந்த பிரசாரத்தில், அகிலேஷ் பயணம் செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில், சர்தார் வல்லபாய் படேல், சோசலிஸ்ட் தலைவர்களான ஆச்சார்யா நரேந்திர தேவ், ராம் மனோகர் லோகியா, அம்பேத்கர் போன்றவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படமும் இடம் பெற்றிருப்பது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் பிரசாரங்களில் இதுவரையில் எந்த கட்சியும் இதுபோல் கலாம் படத்தை பயன்படுத்தியது கிடையாது.

சமாஜ்வாடியின் செல்வாக்குமிக்க முஸ்லிம் தலைவராக கருதப்படும் அசம்கான், பல்வேறு வழக்குகளில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், முஸ்லிம்களின் வாக்குகளை கவர்வதற்காகவே கலாம் படத்தை அகிலேஷ் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சமாஜ்வாடி மறுத்துள்ளது.

Related Stories:

More