முல்லை பெரியாறு அணை பற்றி பொய் பிரசாரம் கண்டித்து கேரள எல்லையில் விவசாயிகள் முற்றுகை

கூடலூர்: பெரியாறு அணை குறித்து கேரளாவில் தொடர்ந்து செய்யப்படும் பொய் பிரசாரங்களை கண்டித்து, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பாக கேரள எல்லையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ‘‘பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக  உயர்த்த வேண்டும், கேரளாவில் பெரியாறு அணை தொடர்பாக விஷம கருத்துக்களை  பரப்பி வரும் ரசூல் ஜோயை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய  வேண்டும், பெரியாறு அணை குறித்து பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் கேரளா  பிரிகேட் என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தமிழக - கேரள எல்லை லோயர்கேம்ப் மணிமண்டபம் அருகே முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, முற்றுகையிடுவதற்காக கேரள எல்லை ேநாக்கிச் சென்ற விவசாயிகளை பாதுகாப்பு பணியில் இருந்த உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் தடுத்தனர். இதனால் விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் லோயர்கேம்ப் பென்னிகுக் மணிமண்டபம் அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன், ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாய சங்கத்தினர் கருத்துக்கள் உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறியதை அடுத்து, கலைந்து சென்றனர்.

Related Stories: