பணம், ஒன்றிய அமைச்சர் பதவி ஆம் ஆத்மி எம்பி.யை வளைக்க பாஜ பேரம்: பஞ்சாப்பில் பகிரங்க மோதல்

சண்டிகர்: பஞ்சாப்பில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அதை சந்திப்பதற்காக  பாஜ முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் முதல் கட்டமாக, எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை இழுத்து, அக்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.  ஏற்கனவே, காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், புதிய கட்சி தொடங்கி பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த வலையில், தற்போது இம்மாநில ஆம் ஆத்மி கட்சி எம்பி.யையும் சிக்க வைக்க, ஆசை காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவராக இருப்பவர் பகவந்த் மான். சங்ரூர் தொகுதி எம்பி.யாகவும் இருக்கிறார்.

இது தொடர்பாக பகவந்த் மான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பஞ்சாப்பில் பாஜ  குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது.  இம்மாநில பாஜ.வை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் என்னை அணுகி, பாஜ.வில் சேர்ந்தால் பெரியளவில் பணமும், ஒன்றிய அரசில் கேபினட் அமைச்சர் பதவியும் வழங்குவதாக ஆசை காட்டினார்.  மேலும், இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு உள்ளே ஒரே எம்பி நீங்கள்தான். எனவே, பாஜ.வுக்கு மாறினால் கட்சித் தாவல் தடை சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்தார்,’’ என்றார். மானின் இந்த குற்றச்சாட்டை பாஜ மறுத்துள்ளது. பேரம் பேசிய பாஜ தலைவரின் பெயரை பகிரங்கமாக சொல்லும்படியும் சவால் விடுத்துள்ளது.

Related Stories: