நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் 4.5 சதவீத வளர்ச்சி இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து கைகொடுக்கும் விவசாயம்: இந்த ஆண்டும் உற்பத்தி உயரும் என எதிர்பார்ப்பு

சென்னை: நடப்பு  நிதியாண்டின் 2ம் காலாண்டில், விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளன.  கடந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா ஊரடங்கு துவங்கியபோது, நாட்டின் தொழில்துறைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கிப் போய்விட்டன. நகரங்களில் வேலை இழந்த பலர், சொந்த ஊர்களுக்கு செல்லத் துவங்கினர். குறிப்பாக, கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு பிழைப்புக்காக வந்திருந்த இளைஞர்கள், இனி தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற அளவிற்கு விரக்தியை அடைந்தது, கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில்தான்.

  ஆனால், கிராமங்களுக்கு சென்ற இளைஞர்கள் பலருக்கும் கை கொடுத்தது விவசாயம்தான். விவசாயத்தில் இறங்கிய இளைஞர்கள் அப்போதுதான் அதன் அருமையை உணர ஆரம்பித்தனர். இன்ஜினியரிங் படித்தவர்கள் கூட, விவசாயத்தில் இறங்கினர். வயல் வேலைதான் அவர்களுக்கு கொரோனா சமயத்தில் வாழ்வளித்தது. இதுமட்டுமின்றி, புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பலர், இந்த துறை மூலம்தான் தேசிய வேலை உறுதி திட்ட பலனை பெற்றனர்.   இந்த வகையில், நடப்பு நிதியாண்டிலும் வேளாண் துறை வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமானது. இதில் ஜிவிஏ எனப்படும் மொத்த மதிப்பு கூட்டல், ஒரு துறையின் பொருளாதார வளர்ச்சியை துல்லியமாக கணக்கிட உதவுகிறது. ஜிடிபிஐ போல ஜிவிஏவும் ஒரு உற்பத்தி குறியீடாக கருதப்படுகிறது. கடந்த 2020-21 நிதியாண்டில் ஜிடிபி மைனஸ் 23.9 என்ற படு மோசமான வீழ்ச்சியை சந்தித்தது. அப்போது கூட, வேளாண் துறை ஜிவிஏ 3.4 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது.  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணிகளில் ஜிவிஏ 4.5 சதவீதமாக இருந்தது. 2ம் காலாண்டிலும் இதே வளர்ச்சி நீடித்துள்ளது. இந்த துறையில், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்த துறையின் தற்போதைய விலை குறியீடு 7.9 சதவீதமாக உள்ளது.

இது முந்தைய ஆண்டில் 7.3 சதவீதமாக மட்டுமே இருந்தது. அதேநேரத்தில் 2019-20 நிதியாண்டின் 2ம் காலாண்டில் இரந்த 8.7 சதவீதத்தை விட சற்றே குறைவு. இதுபோல, பண வீக்கமும் இந்த துறையில் சற்று பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயம் மற்றும் அந்த துறை சார்ந்த வளர்ச்சி குறித்து  பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது; பிற துறைகளுடன் ஒப்பிடுகையில் வேளாண் துறை சற்று சிறப்பான வளர்ச்சியையே எட்டியுள்ளது எனலாம். இந்த காலாண்டில், நீண்ட கால சராசரி வளர்ச்சியாக 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை காணப்படுகிறது. ஜூலை செப்டம்பர் காலாண்டில் சந்தைக்கு அனுப்பப்படும் வேளாண் பொருட்கள் வழக்கத்தை விட சற்று குறைவு என்பதும் இதற்கு முக்கிய காரணம். நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் கணக்கில் கொள்ளும்போது, விவசாய துறை நீண்ட கால சராசரியாக 3.5 சதவீதம் முதல் 4 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். மேலும், காரிப் பருவத்தில், 2021-22 (ஜூலை - ஜூன்) ஆண்டு முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, உணவு தானியங்கள் உற்பத்தி அதிகபட்சமாக 150.50 மில்லியன் டன்களாக இருக்கும் எனவும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மட்டும், கடந்த ஆண்டை விட சுமார் 2.66 சதவீதம் குறைந்து 23.39 மில்லியன் டன்களாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  எண்ணெய் வித்துக்களில், வேர்க்கடலை 8.25 மில்லியன் டன், சோயா பீன் 12.72 மில்லியன் டன் எனவும் இருக்கும்.

 இதுபோல், பருப்பு வகைகள் 9.45 மில்லியன் டன்களாக இருக்கும். இது முந்தைய ஆண்டை விட 8.74 சதவீதம் அதிகம். இவற்றில் துவரம் பருப்பு முந்தைய ஆண்டை விட 3.5 சதவீதம் அதிகரித்து 4.43 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2020-21 ஆண்டில், பருப்பு வகைகள் உற்பத்தி முதலாவது மற்றும் 4வது முன்கூட்டிய மதிப்பீட்டை விட 6.65 சதவீதம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* அனைத்து துறைகளையும் ஒப்பிடுகையில், பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், விவசாயம் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் கை கொடுக்கிறது.

* கொரோனா ஊரடங்கு காலத்தில், நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய இளைஞர்களுக்கும், புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களுக்கும் விவசாயம் தான் வேலை வாய்ப்பை அளித்தது.

* கடந்த 2020-21 நிதியாண்டில் ஜிடிபி மைனஸ் 23.9 என்ற படு மோசமான வீழ்ச்சியை சந்தித்தது. அப்போது கூட, வேளாண் துறை ஜிவிஏ 3.4 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது.

* நடப்பு ஆண்டிலும்,  எண்ணெய் வித்துக்களை தவிர, உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி கணிசமான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: