அதிமுக தொண்டர்களுக்காக அறிக்கை விடுத்து முதலை கண்ணீர் வடிக்கிறார் சசிகலா: ஜெயக்குமார் தாக்கு

சென்னை: அதிமுக தொண்டர்களுக்காக அறிக்கை விடுத்து முதலை கண்ணீர் வடிக்கிறார் சசிகலா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, அன்னதானம் வழங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்கனவே முறையாக அனுமதி பெற்றுதான் நாங்கள் அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். நாங்கள் நிகழ்ச்சி முடித்து, முழுமையாக வெளியே வருவதற்கு முன்பே காவல்துறையினர் அமமுக தொண்டர்களை உள்ளே அனுமதித்து விட்டார்கள். கலவரம் வரவேண்டும் என்பதற்காகவே சிலர் இப்படி செய்கின்றனர்.

இதற்கு காவல் துறையினர் துணை போனது வேதனையாக உள்ளது. பதிலுக்கு நாங்களும் சட்டத்தை கையில் எடுத்தால் நிலைமை மோசமாகி இருக்கும். நாங்கள் சட்டத்தை மதிப்பதால் அமைதியாக இருந்து விட்டோம். ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர் படையுடன் சசிகலா வரவில்லை, குண்டர்கள் படையுடன் வந்தார். அமமுக என்ற கட்சி அம்மா கட்டிக்காத்த அதிமுகவுக்கு எதிரான கட்சி. தற்போது அமமுக தொண்டர்களையும் சசிகலாவையும் பிரிக்க முடியாது. இனியும் அவர்கள் அதிமுகவை காப்பாற்ற போகிறேன் என கூறினால், அதைக்கண்டு தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்.

கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள், அடிப்படை உறுப்பினர் இல்லாதவர்கள் வேண்டுமென்றே தலைமை கழகத்திற்கு வந்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வந்தார்கள். தகுதி உள்ளவர்களை நாங்கள் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தோம். தகுதி இல்லாதவர்கள் தொண்டர்கள் என்ற போர்வையில் வெளியே நின்றுதகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்காக சசிகலா அறிக்கை விட்டு கொம்பு சீவி விடுகிறார். அதிமுக தொண்டர்களுக்கு அவர் அறிக்கை விடுப்பது முதலை கண்ணீர் வடிப்பதற்கு சமம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: