பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பள்ளிகள் அங்கீகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த மாதம் 23ம் தேதி உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் நடந்தது. அதில் விவாதிக்கப்பட்ட விவரங்களின் மீது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வி  ஆணையர்  நந்த குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 746 பள்ளிகள் குறைந்தபட்ச நிலத் தேவையை பின்பற்றாமல் இயங்கிக் கொண்டுள்ளன. இது போல உள்ள பள்ளிகளை மூடுவதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அதற்கான நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக கொண்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. அரசாணை 175ன்படி குறைந்த  நிலம் கொண்ட பள்ளிகள் தற்போதுள்ள நிலையில் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த பள்ளிகளில் கூடுதல் வகுப்பு தொடங்க அனுமதியில்லை. அதனால் அந்தந்த பகுதியை சேர்ந்த அலுவலர்கள் இது குறித்து பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். 1994ம்  ஆண்டு வெளியிட்ட அரசாணை 752ன்படி இரண்டு நிபந்தனைகளுடன் பள்ளிகளுக்கு  நிரந்தர அங்கீகாரம் கொடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக வழக்கின் காரணமாக அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.

3 வருடங்களுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதேபோல 3ஆண்டுக்கு ஒருமுறை அந்த அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டும். மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிகள் 3242 பள்ளிகள் உள்ளன. புதுப்பிக்க வேண்டிய பள்ளிகள் 1985. எனவே நிலுவையில் உள்ள பள்ளிகளின் கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கீகாரம் வழங்க வேண்டும். தொடக்க அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் முதலுதவிப் பெட்டிகள், புகார் பெட்டி, அருகில் உள்ள போலீஸ் நிலைய எண்கள் , ஆய்வாளர் எண், பாலியல் புகார் எண் போன்ற விவரங்கள் பள்ளிகளில் தகவல் பலகையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கட்டண கமிட்டியின் மூலம் பள்ளி கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு எழுத உள்ள மாணவர்களின் பெயர்கள் விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து அனுப்ப வேண்டும். இவ்வாறு ஆணையர் நந்தகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: