தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி: மின்சார வாரியம் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின்இணைப்பு 2 கோடியே 27 லட்சத்திற்கு மேல் உள்ளது. இதேபோல் வணிகம் - 35 லட்சம், தொழிற்சாலைகள் - 7 லட்சம், விவசாயம் - 21 லட்சம், குடிசைகள் - 9 லட்சம், இதர இனம் - 14 லட்சம் என மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மினஇணைப்புகள் உள்ளன. இதுதவிர 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயரழுத்த மின் பயனீட்டாளர்களும் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையின் அளவு 13,500 மெகாவாட்டிற்கு மேல் உள்ளது.

இவற்றுக்கு தேவையான மின்சாரம் அனல், காற்றாலை, சூரியசக்தி, காஸ் போன்றவற்றின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக தமிழக மின்வாரியம் பல்வேறு இடங்களில் நீர்மின்நிலையங்கள் - 2,300 மெகாவாட், அனல் மின்நிலையங்கள் - 4,300 மெகாவாட், காஸ் - 500 மெகாவாட், காற்றாலை - 8,600 மெகாவாட், சோலார் - 4,600 மெகாவாட் என்ற திறனில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் பெறப்படுகிறது.

இந்த உற்பத்தி நிலையங்களில் நாளுக்கு நாள் மின்தேவை உயர்ந்து வருகிறது.

இதற்கு புதிதாக தொழிற்சாலைகள், வீடுகள் உருவாவதே காரணம். எனவே அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆங்காங்குள்ள அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகளை அமைத்து, அதன் மூலமாக மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் வயல்வெளிகளில் சூரிய மின்சக்தி மூலம் தாங்களாகவே மின்உற்பத்தி செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மாவட்டம்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கான பணிகளை தொடங்க செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர், அனைத்து மின் பகிர்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, இங்கு கிடைக்கப்பெறும் அபரிமிதமான சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் சூரிய மின்சக்தி பூங்கா மாவட்டம்தோறும் (மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் நீங்கலாக) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிறுவ உள்ளது.

தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் குறைத்து சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, அவற்றின் மூலம் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் 10 ஆயிரம் மெகாவாட் மின்கலன் சேமிப்பு செய்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் முதல்கட்டமாக தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 2 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள மின்கலன் சேமிப்பு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 5 மெகாவாட் முதல் 500 மெகாவாட் வரையிலான சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையில் பூங்கா அமைப்பதற்கு, மாவட்டந்தோறும் இடங்களை அடையாளம் காண வேண்டும். இது தொடர்பான தகவல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மின்வாரியத் தலைவரின் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுப்பிரிவு செயற்பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைந்து, காலியாக உள்ள இடம் குறித்த விவரங்களை வெகு விரைவில் கடிதம் வாயிலாக தலைமையகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்பயனீட்டாளர்எண்ணிக்கை

பிரிவு    எண்ணிக்கை

வீடுகள்    2.27 கோடி

வணிகம்    35 லட்சம்

தொழிற்சாலை    7 லட்சம்

விவசாயம்    21 லட்சம்

குடிசைகள்    9 லட்சம்

இதர இனம்    14 லட்சம்

மொத்தம்    3.16 கோடி

Related Stories: