போலி ஆவணங்கள் பதிவால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடு விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: பதிவுத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை

சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் போலி பதிவு நடந்து இருப்பதாகவும், அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுக முக்கிய புள்ளிகளின் வற்புறுத்தல் காரணமாக, சட்ட விரோதமாக அரசு புறம்போக்கு நிலங்களை போலியாக ஆவணங்கள் பதிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது. மேலும், அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய கடந்த 2016ல் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி விஐபிக்கள் சிலருடன் சார்பதிவாளர்கள் கைகோர்த்து கொண்டு, தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பதிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.

அதே போன்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்யாமல் பத்திரம் பதிவு செய்ததால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, வணிக பகுதியை குடியிருப்பு பகுதியாகவும், குடியிருப்பு பகுதியை விவசாய பகுதியாக மாற்றம் செய்தும், ஒரே தெருவுக்கு பல மதிப்பு இருப்பதை பயன்படுத்தி குறைவான மதிப்பு நிர்ணயம் செய்து பத்திரம் பதிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை செய்யும் வகையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பத்திரப்பதிவுத்துறையில் நடந்துள்ள தவறுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, போலி பதிவு மற்றும் வருவாய் இழப்பு தொடர்பாக அறிக்கை அளிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இதை தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி பரிந்துரை செய்துள்ளார்.

அதன்பேரில், விரைவில் புலனாய்வு குழு அமைக்கப்படவுள்ளது. இக்குழு மூலம் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரில் சென்று கடந்த 10 ஆண்டுகாலத்தில் பதிவான பத்திரங்கள் தொடர்பாக ஆய்வு செய்கிறது. மேலும், அந்த அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பை குறைத்தும், அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்வது குறித்த விவரங்களை சேகரிக்கின்றனர். தொடர்ந்து அந்த குழுவினர் அரசு நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய்த்துறை ஆவணங்களை ஒப்பிட்டும் ஆய்வு செய்கிறது. இக்குழு 6 மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கவுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: