குழந்தை பருவ புற்றுநோய் மீதான விழிப்புணர்வுக்கு டிஜிபி சைலேந்திர பாபு 126 கி.மீ. சைக்கிள் பயணம்

சென்னை: குழந்தைப் பருவ புற்றுநோய் மீதான விழிப்புணர்வுக்காக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 126 கி.மீ. சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டார். இந்தியாவின் முதல் மெய்நிகர் டூவத்லான் நிகழ்வான அப்போலோ டி2டி 2021, தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பினால் கூடுதல் வலுப்பெற்றிருக்கிறது. அப்போலோ புரோட்டான் சென்டரிலிருந்து காலை 5 மணிக்கு தொடங்கி, திரும்பவும் அதே அமைவிடத்திற்கு திரும்பி வந்த பயண தூரம் 126 கி.மீ. சைலேந்திர பாபுவுடன் இணைந்து டி2டி மாரத்தான் நெவில் எண்டீவர்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் நெவில் பிலிமோரியா சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.

குழந்தைப்பருவ புற்றுநோய்களுக்கான சிகிச்சை மீது விழிப்புணர்வை உருவாக்கவும், சிகிச்சைக்கான ஆதரவையும், நிதியையும் திரட்டுவதே அப்போலோ டி2டி-ன் நோக்கம். குழந்தைப்பருவ புற்றுநோய் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் கூடுதலாக, புற்றுநோய்க்கான இடர்வாய்ப்பு குறைவாக உள்ள எதிர்காலத்தை உறுதி செய்ய ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் தேவையையும் ஊக்குவிக்கிறது. இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் அனைத்து நிதியும் அப்போலோவின் புற்றுநோய் மருத்துவர்கள் குழுவால் அடையாளம் காணப்படும், இளம் புற்றுநோயாளிகளுக்கு உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். எனவே, இப்பிரச்னை குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பது இப்போது மிக முக்கியம்.  ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், நடைமுறைகளையும் வாழ்க்கையின் ஒரு வழிமுறையாக முன்னிலைப்படுத்தவும் இந்நிகழ்வு உதவும் என்று நம்புகிறேன் என்றார். பின்னர் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி கூறுகையில் குழந்தைப்பருவ புற்றுநோய் வராமல் தடுப்பதும், ஆரம்ப நிலையிலேயே இதன் பாதிப்பை கண்டறிவதும், ஒரு குழந்தையின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு பெரிய அளவில் உதவும். இச்சிகிச்சையில் தற்போது கிடைக்கின்ற தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகும் என்றார்.

நிறுவனர் நெவில் பிலிமோரியா கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்போலோ கேன்சர் சென்டருடன் இணைந்து செயல்படவிருக்கிறோம். சமுதாயத்தின் நலனுக்காக பயனளிக்கும் விளைவுகளை இந்த ஒத்துழைப்பு நிச்சயம் வழங்கும். இந்தியாவில் புற்றுநோய்க்கு உரிய முறையான சிகிச்சைகளைப் பெறுவதற்கு பெரும்பாலான குழந்தைகளுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் நிதி முழுவதும் இக்குழந்தைகளுக்கான அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்யவும், அவர்களது எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்றார்.

Related Stories: