புளியந்தோப்பு பகுதியில் வெள்ளம் சூழ்வதை தடுக்க ரூ.7.10 கோடியில் புதிய மழைநீர் வடிகால்கள்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: புளியந்தோப்பு பகுதியில் வெள்ளம் சூழ்வதை தடுக்க ரூ.7.10 கோடி மதிப்பில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இங்கு ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் கடந்த 27ம் தேதி நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், வல்லுநர்களின் ஆலோசனைகளைபெற்று புளியந்தோப்பு பகுதியின் புவியியல் மேற்பரப்பிற்கு ஏற்ப புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்க சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். புளியந்தோப்பு பகுதிகளில் மழைநீரானது ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் வழியாக சென்று காந்தி கால்வாயில் கலக்கிறது. தற்போது உள்ள மழைநீர் வடிகால் செங்கல் மற்றும் உரல் வடிகால்களாக உள்ளன. இந்த வடிகால்களில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் இணைப்புகளும் உள்ளன.  

மேலும் இந்த மழைநீர் வடிகால்களில் 2 செ.மீ முதல் 3 செ.மீ அளவிற்கான மழைநீரை மட்டுமே கொண்டு செல்லும்  நிலை உள்ளது. தற்போது அதிக அளவு மழை அதாவது குறிப்பிட்ட ஒருநாளில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே 20 செ.மீ அளவிலான கன மழை பெய்ததன் காரணமாக  புளியந்தோப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை காந்தி கால்வாய்க்கு கொண்டு செல்லும் அளவிற்கான கட்டமைப்பு இந்த மழைநீர் வடிகால்களில் இல்லை. மேலும் கடந்த மாதம் பெய்த மழையின்போது புளியந்தோப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும், அடைப்புகளை தூர்வாரவும் மழைநீர் வடிகால்களின் மேற்பரப்பு உடைக்கப்பட்டுள்ளது.

எனவே புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலை, ஆகிய பகுதிகளிலும் மற்றும் பல்வேறு சிறு தெருக்களிலும் புளியந்தோப்பு பகுதியின் புவியியல் மேற்பரப்பிற்கு ஏற்ப மழைநீர் வடிகால்கள் அதிக கொள்ளளவு மழைநீரை வெளியேற்றும் திறனுடன் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்பரப்பில் திறக்கக்கூடிய வகையிலான மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளதால், தூர்வாரும்போது கால்வாய் சேதமடையாமல் மேற்பலகையை திறந்து தூர்வார ஏதுவாக இருக்கும்.

மேலும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலைகளில் அமைக்கப்படவுள்ள மழைநீர் வடிகால்கள் மூன்று அல்லது நான்கு இடங்களில் காந்தி கால்வாயில் சென்று கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, புளியந்தோப்பு பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசால் ரூ.7.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர் ஆய்வு மற்றும் வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று, மேற்கண்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More