பத்திரப்பதிவு தடுக்க நீர்வழித்தட நிலங்கள் விவரம் மென்பொருளில் பதிவேற்றம்: பதிவுத்துறை ஐஜி கலெக்டர்களுக்கு கடிதம்

சென்னை: நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை பத்திரப்பதிவு செய்வதை தடுக்கும் வகையில் தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்கள் மூலம் ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களை பதிவு செய்வதை தடுக்கும் வகையில் தமிழ் நிலம் மென்பொருள், ஸ்டார் 2.0 என்கிற மென்பொருள் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால், பூஜ்யம் மதிப்பு காட்டும் என்பதால் புறம்போக்கு நிலங்களில் பத்திரப்பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீர்நிலைகள், நீர் வழித்தடங்களில் உள்ள நிலங்கள் தொடர்பான விவரங்கள் தமிழ் நிலம் மென்பொருளில் பதிவு செய்யப்படவில்லை. இதனால், சார்பதிவாளர்கள் சில நேரங்களில் நீர்நிலைகள், நீர்வழித்தடங்ளை பத்திரப்பதிவு செய்யும் நிலை இருந்தது. இந்நிலையில் நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கின் பேரில், நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை எக்காரணம் கொண்டும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது. தவறுபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை பதிவு செய்வதை தடுக்கும் வகையில் தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார்பதிவாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் தொடர்பான நிலங்களின் விவரங்களை தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர்கள் சார்பில் நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் தொடர்பான நிலங்களின் விவரங்களை பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், வருவாய்த்துறை மூலம் அந்த நிலங்களை பதிவு செய்யாமல் இருக்க தமிழ் நிலம் மென்பொருளில் பூஜ்ய மதிப்பில் பதிவேற்றம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

More