பிளாட்பாரத்தில் காலை தேய்த்தபடி தாம்பரம் மின்சார ரயிலில் மாணவர்கள் விபரீத சாகசம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு தினமும் 500க்கும் மேற்ப்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் காலை 10 மணி வரையும், மாலை நேரங்களில் 6 மணி வரையும் கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்பிறகு கூட்டம் இல்லாமல் தான் இருக்கும். அதேபோன்று கூட்டம் இல்லாத நேரத்தில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயில் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

அப்போது ரயில் நிலையத்தில் நின்றிருந்த மாணவர்கள் சிலர் ரயில் வந்தவுடன் ஏறாமல் புறப்பட்டவுடன் ஓடிப் போய் ஒரு பெட்டியின் முன்வாசலில் இரண்டு பேரும், பின்வாசலில் இரண்டு பேரும் ஏறிக்கொண்டனர்.

அப்போது அவர்களுடன் வந்த மாணவர் ஒருவர் நடுவில் இருந்த வாசலில் ஏறி கம்பியை பிடித்துக் கொண்டு தன்னுடைய காலை பிளாட்பாரத்தில் தேய்த்தபடி பயணம் செய்தார். அப்போது அவருடன் வந்த நண்பர்கள் அவரை சிரித்தபடி உற்சாகப்படுத்த ரயில் வேகமாக செல்லும் வரை சுமார் 200 மீட்டர் தூரம் தன்னுடைய ஒரு காலை ரயில் பெட்டியில் வைத்துக் கொண்டு மற்றொரு காலை பிளாட்பாரத்தில் தேய்த்தபடி பயணம் செய்தார். ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் உள்ளே போகும்படி சத்தம் போட்டும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொங்கியபடியே சென்றார்.

ரயில் வேகம் எடுத்ததும்பெட்டிக்குள் ஏறி கொண்டார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இதைப்போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பள்ளி செல்லும் மாணவி ஒருவர் ஓடும் ரயிலில் ஏறி காலை பிளாட்பாரத்தில் மாணவனுடன் போட்டி போட்டு தேய்த்தபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து அந்த மாணவி மற்றும் மாணவரின் பெற்றோரை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் நேரில் அழைத்து அறிவுரைகூறி அனுப்பி வைத்தார். அதைபோன்று ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.பியும் அவர்களை அழைத்து இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மின்சார ரயில்களில் இதுபோன்று சம்பவம் தொடர்ந்து நடைபெற்றது வருவதால் ஆபத்தை விளைக்கக்கூடிய பயணத்தை மாணவர்கள் மேற்ெகாள்ளக்கூடாது என்று ரயில்வே போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: