தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10.10 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவை செல்வதாக இருந்தது. அங்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்தார். மேலும், இன்று காலை 10 மணியளவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு நேற்று மாலை 4.10 மணியளவில் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவசரமாக டெல்லி சென்றார்.

நாகாலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஏற்கனவே நாகாலாந்து கவர்னராக இருந்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான  அவர் நாகாலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர். எனவே, அங்குள்ள பிரச்னைகள் குறித்து  ஆலோசிக்க உள்துறை அமைச்சகம் ஆர்.என்.ரவியை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். ஓரிரு நாட்கள் அவர் டெல்லியில் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories:

More