கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி மேன் பவர் நிறுவனத்தின் உரிமையாளர் கைது: பெண் உதவியாளரிடமும் விசாரணை

சென்னை: சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் வினோத் (35). இவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் பல ஆண்டுகளாக கப்பலில் வேலை தேடி வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில், சுற்றுலா சொகுசு கப்பலில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பார்த்த வினோத் விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டார்.

அப்போது, எதிர்முனையில் பேசிய நபர்கள் நுங்கம்பாக்கத்தில் ‘மேன் பவர்’ என்ற பெயரில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சான்றுகளுடன் நேர்முகத்தேர்வுக்கு வரும்படி கூறியுள்ளனர்.

அதன்படி வினோத், மேன் பவர் நிறுவனத்தில் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார். அதில் அவர் வெற்றி ெபற்றதாக அறிவித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராஜா (38), அவரது உதவியாளர் திவ்யா (26) ஆகியோர் உடனே ரூ.1 லட்சம் பணம் கட்டினால் கப்பலில் வேலை என்று கூறியுள்ளனர்.

அதை நம்பிய வினோத், ரூ.1 லட்சம் பணத்தை மேன் பவர் நிறுவனத்தின் வங்கி கணக்கில் கட்டியுள்ளார். ஆனால் சொன்னபடி அவருக்கு வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வினோத் பலமுறை நிறுவனத்திற்கு சென்று கட்டிய பணத்தை திரும்ப கேட்டுவந்துள்ளார். அதற்கு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் தினகரன் ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது.எனவே, அதிர்ச்சியடைந்த வினோத், ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என்று விளம்பரப்படுத்தி 43 பேரிடம் மொத்தம் 48 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து ஆயிரம்விளக்கு போலீசார் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களான ராஜா மற்றும் அவரது உதவியாளர் திவ்யா மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே மேன் பவர் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்த தினகரனை கடந்த 1ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இந்த மோசடியில் தினகரனுக்கு தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. அதைதொடர்ந்து அவரை போலீசார் விடுவித்தனர். பிறகு இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த மேன் பவர் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் அவரது பெண் உதவியாளர் திவ்யாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories: