இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆனது ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான்: ஜெய்ப்பூர்-9 புனே-7 டெல்லியில் ஒருவருக்கும் தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ப்பூரில் 9 பேருக்கும், புனேவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேருக்கும், தான்சானியாவில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ், வீரியமிக்கதாகவும், ஆபத்தானதாகவும் இருக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க ஒன்றிய அரசு, நாடு முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நோய் பரவிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடு கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்த நிலையில், நேற்று முன்தினம் வரை கர்நாடகாவில் 2 பேர், குஜராத், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் என 4 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு பாதித்துள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்த 37 வயது நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதனால், அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியானது. அவரது மாதிரிகள் மரபணு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் தொற்றிய நபர் 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக போட்டவர் ஆவார்.

இதே போல், மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது நேற்று உறுதியானது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த 7 பேரும் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் தற்போது ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக  அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

* விமான பயணிகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் மெல்ல மெல்ல பரவி வரும் நிலையில், அமெரிக்கா வரும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாட்டு பயணிகளும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. பயணத்திற்கு ஒருநாள் முன்னதாக இந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

* ஒரே நாளில் 2,796 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,796 பேர் பலியானதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை தகவல் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சுகாதார அமைச்சகம், பீகாரில் சில தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம் 2,426 கொரோனா மரணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதே போல கேரள அரசு சார்பில் 296 மரணங்கள் கொரோனா மரணமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது. கடந்த ஜூலை 21ம் தேதி மகாராஷ்டிரா அரசு கொரோனா மரணங்களை திருத்த வெளியிட்டதன் மூலம், அன்றைய ஒருநாள் பலி எண்ணிக்கை 3,998 ஆக இருந்ததே அதிகபட்சமாகும். தற்போது மொத்த பலி 4 லட்சத்து 73 ஆயிரத்து 326 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3.46 கோடி. 99,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: