ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் குண்டம் விழா: பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது

ஈரோடு: ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் பூசாரி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான குண்டம், தேர்த்திருவிழாவுக்காக கடந்த மாதம் 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

25ம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது. கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி, அம்மனுக்கான நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சில அடி தூரம் தேர் இழுக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் அம்மன் சிலை மீண்டும் கோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை:    கொரோனா பரவல் காரணமாகவும், அரசு வழிகாட்டு விதிமுறைப்படி, குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில் பக்தர்களை கோயில் நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. குண்டம் மற்றும் தேரோட்டத்தில் பக்தர்களை அனுமதிக்காமல் எளிமையாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் கோயிலில் அம்மனை வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதில், கருங்கல்பாளையம் மட்டும் அல்லாது அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோயிலில் நாளை (6ம் தேதி) இரவு கோயில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், 7ம் தேதி காலை கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு பூஜையும், 8ம் தேதி இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 9ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories: