நாட்டிலேயே முதன் முறையாக 3 அடி உயரமானவருக்கு டிரைவிங் லைசென்ஸ்: தெலங்கானா மாநிலத்தில் ஆச்சரியம்

ஐதராபாத்: நாட்டிலேயே முதன் முறையாக 3 அடி உயரமுள்ள ஒருவருக்கு தெலங்கான மாநிலத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் குகத்பள்ளியில் வசிக்கும் மூன்று அடி உயரமுள்ள ஷிவ்லால் (42) என்பவருக்கு, தானும் சாலைகளில் வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அவரது உயரம் மூன்று அடி என்பதால் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், இவருக்கு யாரும் டிரைவிங் கற்றுக் கொடுக்க தயக்கம் காட்டினர்.

இந்நிலையில் தனியார் டிரைவிங் ஸ்கூல் மூலம் சமீபத்தில் டிரைவிங் கற்றுக் கொண்டார். அதையடுத்து அவருக்கு டிரைவிங் லைசென்சை போக்குவரத்து அதிகாரிகள் வழங்கியுள்ளனர். நாட்டிலேயே முதன் முறையாக மூன்று அடி உயரமுள்ள ஒருவர், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றவர் என்ற சிறப்பை ஷிவ்வால் பெற்றுள்ளார். தற்போது இவர், தனது மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்து வருகிறார். மேலும், சிறப்பு ஓட்டுநர் பள்ளியைத் திறக்க திட்டமிட்டுள்ளார்.

இதன்மூலம் இவரைப் போன்றவர்கள் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. இவரது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து ஷிவ்வால் கூறுகையில், ‘மூன்று அடி உயரமுள்ள நான், நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர் என்ற அடிப்படையில் எனக்கு தெலுங்கு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனையாளர் பட்டியலில் இணைந்துள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால், என்னால் டிரைவிங் கற்றிருக்க முடியாது.

ஐதராபாத்தை சேர்ந்த கார் வடிவமைப்பாளர் ஒருவரின் உதவியுடன், எனது காரில் சில மாற்றங்களைச் செய்து காரை ஓட்டி வருகிறேன். வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது நிறைய சிரமங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த மூன்றடி உயரமுள்ள ஒருவர் வாகனம் ஓட்டும் வீடியோவை பார்த்தேன். அவரை போலவே நானும் டிரைவிங் கற்றுக் கொண்டேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

Related Stories: