ஒமிக்ரான் அச்சத்தால் மக்களிடம் திடீர் ஆர்வம்; ஒரே நாளில் 1.03 கோடி தடுப்பூசி சாதனை: 14.84 லட்சம் டோஸ் போட்டு தமிழகம் 2வது இடம்

புதுடெல்லி: ஒமிக்ரான் பரவல் அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 1.03 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பீகாருக்கு அடுத்தப்படியாக 14.84 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார துறை தெரிவித்துள்ளது. புதுவகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. தடுப்பூசிக்கு  கட்டுப்படாமல், வேகமாக பரவும். பயண கட்டுப்பாடுகளால் ஒமிக்ரான் பரவுவதை  தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று  குறைந்து கட்டுப்பாடுகள் தளர்ந்ததால், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை  சிலர் அலட்சியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சம்  காரணமாக தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1.03 கோடி பேர்  தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 127,49,96,681 டோஸ் தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் பீகாரில் அதிகபட்சமாக 15.33 லட்சம்,  தமிழ்நாட்டில் 14.84 லட்சம், ராஜஸ்தானில் 10.8 லட்சம், உத்தரபிரதேசத்தில் 10.24 லட்சம் என்ற வரிசையில் மற்ற மாநிலங்களிலும் தடுப்பூசிகள்   போடப்டட்டுள்ளன.

இதுவரை கிடைக்கப் பெற்ற புள்ளி விபரத்தின்படி, 18  வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 85% பேர் முதல் டோஸ் தடுப்பூசியை  போட்டுள்ளனர். மேலும் 50.35% பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும்  போட்டுள்ளனர். இருந்தாலும் நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்  கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவர்களை  பரிசோதித்தலில் பெங்களூருடை சேர்ந்த இருவர், குஜராத்தில் ஒருவர்,  மும்பையில் ஒருவர் என 4 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரையிலான புள்ளி  விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா,  மிசோரம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் புதியதாக கொரோனா  பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அதனால், முன்னெச்சரிக்  அறிறுத்தல்களை மாநில சுகாதாரத்துறைக்கு ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ்  பூஷன் கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: