கொரோனா உறுதியாகி ஆஸ்பத்திரியில் அட்மிட்: கேரளா வந்த ரஷ்ய வாலிபருக்கு ஒமிக்ரானா?

திருவனந்தபுரம்: லண்டனில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு இன்று அதிகாலை விமானத்தில் வந்த ரஷ்ய வாலிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது சளி, ரத்த மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒமிக்ரான் நோய் பாதிப்பு நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 21ம் தேதி லண்டனில் இருந்து கோழிக்கோடுக்கு வந்த கேரள வாலிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவரது தாய்க்கும் தொற்று பரவி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஒமிக்ரான் டெஸ்டுக்காக சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, புனேயில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஜெர்மனியில் இருந்து நேற்று முன்தினம் கோழிக்கோட்டுக்கு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்தும் ஒமிக்ரான் டெஸ்டுக்காக ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு திருவனந்தபுரம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவ பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று அதிகாலை லண்டனில் இருந்து கொச்சிக்கு வந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த வாலிபருக்கும் கொரோன உறுதி செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு: கொச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை சுமார் 5.20 மணி அளவில் லண்டனில் இருந்து ஒரு விமானம் வந்தது. விமானத்தில் ரஷ்யாவை சேர்ந்த வாலிபர் உள்பட அனைத்து பயணிகளுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில் ரஷ்ய வாலிபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு ஒமிக்ரான் உள்ளதா? என்பதை கண்டறிய சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. பின்னர் அவை திருவனந்தபுரத்தில் உள்ள ராஜிவ்காந்தி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இவருடன் வந்த மற்ற பயணிகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: