தொடர்மழையால் நிரம்பியது குல்லூர்சந்தை, வெம்பக்கோட்டை அணைகள்

விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லூர்சந்தை அணைக்கு மதுரை மாவட்ட பேரையூர் பகுதி கண்மாய்கள் நிறைந்து வெளியேறும் தண்ணீரும்,  காட்டுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடமலைக்குறிச்சி கண்மாய் வந்தடைகிறது. அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் கவுசிகா ஆறு மூலம் குல்லூர்சந்தை அணை வந்தடைகிறது. விருதுநகர் நகராட்சி, சிவஞானபுரம், பாவாலி, கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அணை சாக்கடையாக மாறி விட்டது. 2,891  ஏக்கர் பாசனத்திற்கு கட்டப்பட்ட அணையில் சாக்கடை நீர் கலப்பதால் தற்போது விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கிறது.

கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் வடமலைக்குறிச்சி கண்மாய் நிறைந்து, 4 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்து 7.35 அடி உயரமுள்ள குல்லூர்சந்தை அணை நேற்று நிறைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் கோல்வார்பட்டி அணைக்கு செல்கிறது. 17 அடி உயரமுள்ள கோல்வார்பட்டி அணையில் நேற்றைய நிலவரப்படி 13 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடியில்): பெரியாறு அணை 45 அடி கொள்ளவில் 30 அடியும்(அணைக்கு வினாடிக்கு 144 கனஅடி நீர் வரத்தும் 153 கனஅடி வெளியேற்றம்).

கோல்வார்பட்டி அணை 40 அடி கொள்ளவில் 31 அடியும்(வினாடிக்கு 82 கன அடி வரத்தும், 45 கனஅடி வெளியேற்றம்). வெம்பக்கோட்டை அணை 21 அடி கொள்ளவில் 17 அடியும்( வினாடிக்கு 2,718 கனஅடி நீர் வரத்து உள்ளது). ஆணைக்குட்டம் அணை 23 அடி கொள்ளவில் 15 அடியும்(வினாடிக்கு 250 கனஅடி வரத்தும், 100 கனஅடி வெளியேற்றம்). இருக்கன்குடி அணையின் 21 அடி கொள்ளவில் 15 அடி உள்ளது. சாஸ்தா கோவில் அணையின் 30 அடி கொள்ளவில் 29 அடி(வினாடிக்கு 30 கன அடி வரத்தும், 30 கன அடி வெளியேற்றம்) உள்ளது.

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் முழு கொள்ளளவு 7.5 மீட்டர் ஆகும்.  அணை நீரை பயன்படுத்தி 8 ஆயிரத்து 500 ெஹக்டேர் பரப்பில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சி  தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. அணையை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடைபெறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்டம் முழுவதிலும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. வெம்பக்கோட்டை பகுதியில் 6.50 செ.மீட்டர் வரை மழை பெய்தது. இதனால்  அணைக்கு ஒரே நாளில் 3 மீட்டர் வரை தண்ணீர் வந்தது.

நேற்று முன்தினம் அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு 440 கன அடி  நீர்வரத்து  இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 5 மீட்டர் தண்ணீர் அளவை எட்டியது.  தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இருந்ததால் மாலை 3 மணி நிலவரப்படி 6.40 மீட்டர் நீர் நிரம்பியது. மாலை 4 மணியளவில் அணை திறக்கப்பட்டது. வைப்பாறு வடிநிலபகுதி செயற்பொறியாளர்  ராஜா, வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ், உதவி பொறியாளர் ராசிந்தியா  ஆகியோர் அணையின் ஷட்டரை திறந்து வைத்தனர். 250 கனஅடி தண்ணீர் வெளியேற்ற  பட்டு வருகிறது. இதனால் வைப்பாற்று கரைஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: