வாடகை கார்களை அடகு வைத்து மோசடி செய்த 3 பேர் கைது: 16 கார்கள் மீட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம், வம்பன் லைன் பகுதியை சேர்ந்த டிரைவர் முனியசாமி (45). இவர், கடலாடி அருகே ஒப்பிலான் மாரியூரை சேர்ந்த முகமது யாசினின் காரை ஒப்பந்த அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளாக ஓட்டி வந்தார். கடந்த அக்.3ல் இவரிடம் ராமநாதபுரம் கோட்டைமேடு தெரு சுப்பிரமணியன், சிகில் ராஜவீதி கார்த்திக் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கார் எடுத்து தருமாறு கேட்டனர். அந்த காரை அவர்களுக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு மற்றொரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டினால் இரட்டை வருமானம் கிடைக்கும் என எண்ணி முனியசாமி, முகமது யாசினின் காரை கார்த்திக்கிடம் கொடுத்தார்.

இருமுறை ரூ.5 ஆயிரம், ஒரு முறை ரூ.10 ஆயிரம் மட்டும் முனியசாமிக்கு வாடகை கட்டணம் கொடுத்தனர். பேசியபடி முழு தொகையை தராததால், முனியசாமி கடந்த 1ம் தேதி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வாடகைக்கு எடுக்கப்படும் பல ரூபாய் லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்களை கார்த்திக்கின் சகோதரர் இளையராஜா நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அப்பணத்தை வைத்து மதுரையில் உள்ள விடுதிகளில் சூதாடியுள்ளார்.  ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். காரை பந்தயமாக வைத்து சீட்டாடியுள்ளார்.

இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 கார்களை வாடகைக்கு எடுத்து, மதுரையில் அடகு வைத்து மோசடி செய்துள்ளார். இதையடுத்து தனிப்படையினர் கார் உரிமையாளர்களின் விவரங்களை சேகரித்து, அடகு வைத்த 16 கார்களை மீட்டனர். மேலும் 3 கார்களின் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட கார்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சுப்பிரமணி (27), கார்த்திக் (30) இளையராஜா (39) ஆகியோரை போலீசார் கைது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: