நெமிலி கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை தடுக்க பள்ளம் எடுத்து கரை கட்டினர்

நெமிலி: நெமிலி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள்  புகார் தெரிவித்தனர்.  தினகரன் செய்தி எதிரொலியாக நெமிலி காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றில் பள்ளம் எடுத்தனர். தொடர் கனமழை காரணமாக நெமிலி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் கடந்த வாரம்  வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது மழை இல்லாததால் ெவள்ளம் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஆற்றில் அடையாளம் தெரியாத நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் மட்டும் 50 யூனிட் மணல் கடத்தப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதற்காக 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் இவற்றை வேறு இடத்தில் சேகரித்து லாரிகள் மூலமாக குவியல் குவியலாக மணல் கடத்தல் நடக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகளை  அனுப்பி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை  கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, ‘தினகரன்’ செய்திதாளில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.

செய்தி எதிரொலியாக நெமிலி காவல்துறை சார்பில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிலு, ஜெயராஜ் மற்றும் போலீசார் மஞ்சுநாதன், நெமிலி  வருவாய்த்துறை சார்பில் வருவாய் அலுவலர் தினகரன், கிராம அலுவலர் நிரோஷா, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ரவி ஆகியோர் தலைமையில் கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை தடுக்க ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆற்றை சுத்தி பள்ளம் எடுத்து கரை கட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் ‘தினகரன்’ நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

More