காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு

காவேரிப்பாக்கம்:  காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம், தனியார் கம்பனி,  மாரியம்மன் கோவில் தெரு, பொன்னம்பிள்ளையார் கோயில், தோட்டக்கார அங்காளம்மன் கோயில், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட 15-வார்டுகளிலும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு  முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் செலுத்தாதவர்களின் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், வட்டார மருத்துவ அலுவலர் டேவிட், வட்டார  சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், மருத்துவர் இளங்கோ,  சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உட்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக  பேரூராட்சி ஊழியர்கள், மகளிர் குழுவினர் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டன. பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி  செலுத்த  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த முகாமில் மாலை 4-மணி நிலவரப்படி 250 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதேபோல் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஓச்சேரி, ஆயர்பாடி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, கட்டளை, சேரி, பன்னியூர், மகாணிப்பட்டு, துறைபெரும்பாக்கம்,  உள்ளிட்ட 29-ஊராட்சிகளிலும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.  இதில் மாலை 4-மணி நிலவரப்படி 1633 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோசப்கென்னடி, தனசேகர், ஒன்றிய குழு தலைவர் அனிதாகுப்புசாமி, ஒன்றிய கவுன்சிலர் தீபாகார்த்திகேயன், ஊராட்சி செயலாளர்கள்மோகன், ராஜா, சங்கர், லலிதா உட்பட பலர் உடன் இருந்தனர்.

நெமிலி: நெமிலி ஒன்றியத்தில் 71 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. நெமிலி  பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன்  தலைமையிலும், பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் தலைமையிலும்   பி.டி.ஓ. செல்வகுமார் தலைமையிலும் அந்தந்த பகுதி  ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில்   கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் புன்னை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் உதவியுடன் அந்தந்த பகுதிக்கு சென்று தடுப்பூசி செலுத்தும்  பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

More