×

தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இதர தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை உள்பட பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது, டெல்டா பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

எனினும், டிசம்பர் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை ஓரிரு இடங்களில் விட்டு விட்டு மிதமான மழையே பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நாளையும் இந்த மாவட்டங்களில் மழை இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : southern Tamil Nadu , Chance of heavy rain in 4 districts today due to atmospheric circulation in southern Tamil Nadu.! Meteorological Center Information
× RELATED தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்