இணையதள குற்றங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக, பாலக்கரை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம் கலந்து கொண்டு, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் பேசும், பள்ளி குழந்தைகளை பாதுகாப்பதில் பள்ளி தலைமை ஆசிரியர்களாகிய உங்களது கடமை மிகவும் இன்றியமையாதது ஆகும்.

உங்களது பள்ளி அமைந்துள்ள பகுதியின் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, கஞ்சா, புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்தால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தகவல் தெரிந்தால் அதற்கான கட்டணமில்லாத தொலைப்பேசி எண் 1098 மற்றும் 181 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக தற்சமயம் பள்ளிக்குழந்தைகள் படிப்பிற்காக அதிகாமாக இணைய தளத்தினை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், இணையதள குற்றங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இணைய தளத்தில் ஏதேனும் குற்றங்கள் ஏற்பட்டால் மாவட்ட தலை நகரில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் அவரது குழுவினர் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்தினர்.

Related Stories: