அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

செந்துறை: அரியலூர் மாவட்டம் அயன்தத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லையூர் கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாடு சுதந்திரமடைந்து இதுவரை மக்கள் போக்குவரத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் இருந்து வருகிறது, மேலும், புதிய காலனி, பழைய காலனியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் பொதிய மின்சார வசதி இல்லாமலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரேஷன் கடை இல்லை எனவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி ஆண்கள் பெண்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தளவாய் - பெண்ணாடம் சாலையில் காலி குடங்கள், கோரிக்கை பாதாதைகளை ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தளவாய் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அப்போது விரைவில் அதிகாரிகள் முல்லையூர் வந்து கிராமத்தின் அவல நிலையை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், தவறினால் குடும்ப அட்டை, ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனகூறி கலைந்து சென்றனர், இதனால் தளவாய் - பெண்ணாடம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: