மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

பெரம்பலூர்: சு.ஆடுதுறை கிராமத்தில் மயானப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கான மயான பாதைக்கு செல்லும் வழியிலுள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை அப்பகுதிமக்கள் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.

இருப்பினும் நடவடிக்கை இல்லாததால் நேற்று காலை ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் லெப்பைக்குடிக்காட்டில் இருந்து அகரம் சிகூர் செல்லும் சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் தாசில்தார் அனிதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முறையான விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் லெப்பைக் குடிக்காட்டிலிருந்து அகரம்சிகூர் செல்லும் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Related Stories:

More