பைக் விபத்தில் தடுமாறி விழுந்த மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு குவியும் பாராட்டு

மன்னார்குடி: பைக்கில் இருந்து தடுமாறி விழுந்து உயிருக்கு போராடிய மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிகிறது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அடுத்த தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வனஜா(39). மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வரும் இவர், நேற்றுமுன்தினம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டம் மதுக்கூருக்கு சென்று விட்டு காரில் மன்னார்குடி திரும்பினார்.

அப்போது மன்னார்குடி 6ம் நம்பர் வாய்க்கால் பகுதி அருகே வந்த போது  பாலிடெக்னிக் 3ம் ஆண்டு படித்து வரும் வசந்த் (20) ைபக் விபத்தில் தடுமாறி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். இதை பார்த்த செவிலியர் வனஜா, காரில் இருந்து இறங்கி வசந்த்தை பரிசோதித்ததில் அவரது இதய துடிப்பு அபாய கட்டத்தில் குறைந்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வசந்த்தின் நெஞ்சு பகுதியை பலமாக அழுத்தி முதலுதவி சிகிச்சை கொடுத்ததில் அவருக்கு இதய துடிப்பு மீண்டும் சீரானது. தொடர்ந்து, 108 ஆம்புலன்சில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வசந்த்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனித நேயத்துடன் உரிய நேரத்தில் செயல்பட்டு வசந்த்தின் உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவின் மனிதநேய செயலை அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேற்று பாராட்டினார். இதையடுத்து, திருவாரூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் செவிலியர் வனஜாவை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேற்று நேரில் வரவழைத்து அவரது அர்ப்பணிப்பு உணர்வு, சமூக அக்கறையை பாராட்டியும், செவிலியர் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தும் நற்சான்றிதழ் வழங்கினார். இதே போல் செவிலியர் வனஜாவுக்கு எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

More