வீடுகளில் தேங்கிய தண்ணீரை அகற்ற காலதாமதம்: நித்திரவிளை அருகே சாலை மறியல்: இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நித்திரவிளை: நித்திரவிளை அருகே கிராத்தூர், வலியம்மகுழி, மணவிளை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் வெள்ளம் புகுந்து காணப்படுகிறது. இந்த வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்காத ஏழுதேசம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் சேர்ந்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தாரகை கத்பட் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில்  தேங்கி நிற்கும் மழைநீர் நேற்று காலை 10 மணிக்கு மோட்டார் வைத்து அகற்றப்படும் என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு கிள்ளியூர் தாசில்தார் திருவாளி, ஏழுதேசம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜாண்சன் ஆகியோர் வந்திருந்தனர், அதேவேளையில் தண்ணீர் அகற்றும் பணி நடைபெறாமல் நேரம் சென்று கொண்டிருந்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், ஒரு கட்டத்தில் சுமார் 11.30 மணியளவில் பொதுமக்கள் நித்திரவிளை கொல்லங்கோடு மேற்கு கடற்கரை சாலையில் மணவிளை பகுதியில் மறியல் செய்தனர். அவர்களிடம் நித்திரவிளை போலீசார் பேசி சாலையிலிருந்து எழும்ப வைத்தனர். இந்த மறியல் போராட்டம் சுமார் பத்து நிமிடம் தான் நீடித்தது.  

சம்பவ இடத்திற்கு ஏற்கனவே வந்திருந்த  ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், உட்பட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் அரசு அதிகாரிகளுடன் மழைநீரை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்த நிலையில் தண்ணீர் அகற்றும் மோட்டார் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த  பொதுமக்கள் மதியம் 12 மணியளவில் மீண்டும சாலையில் உட்கார்ந்தனர். இவர்களுடன் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ்,  முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர்கள் கோபன், பெனடிக்ட், டென்னிஸ், மாவட்ட பொறுப்பாளர் சுனிதா, ஏழுதேசம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் விமல், உட்பட ஏராளமான பொதுமக்கள் ஆண்களும் பெண்களுமாக கலந்து கொண்டனர்.

சாலை மறியல்  செய்தவர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், அதில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றிய பிறகு தான் சாலை மறியல் கைவிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மதியம்  2 மணியளவில் ராட்சத மோட்டார் கொண்டு வரப்பட்டு, சரியாக 2:30 மணியளவில்  தண்ணீர் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக நித்திரவிளை-கொல்லங்கோடு மேற்கு கடற்கரை சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

Related Stories: