நாகர்கோவிலில் செயின் பறித்த கொள்ளையர்களை ‘பேஸ் டிராக்கர்’ ஆப் மூலம் கண்டுபிடிக்க தீவிரம்: 2 தனிப்படைகள் அமைப்பு

நாகர்கோவில்:  நாகர்கோவிலில் பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையர்களின் உருவம், கண்காணிப்பு கேமராவில் சிக்கியது. பேஸ் டிராக்கர் ஆப் மூலம் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார்  இறங்கி உள்ளனர்.  நாகர்கோவில் பிளசண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (67). இவர் கடந்த நவம்பர் 6ம் தேதி, நாகர்கோவில் கேப் ரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு, வீட்டு அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் சரோஜாவை கீழே தள்ளி சரமாரியாக தாக்கி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் செயினை பறித்து விட்டு தப்பினர்.

இந்த சம்பவத்தில் இன்னும் துப்பு துலங்காத நிலையில், கடந்த 2ம் தேதி நாகர்கோவில் பிளசண்ட் நகரை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரது மனைவி இயேசுவடியாள் (68) என்பவர், மேலப்பெருவிளை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் நடித்து, அவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் செயினை பறித்து விட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து, ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் பைக்கில் செல்லும் இரு நபர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் பைக் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்துள்ளார். பின்னால் இருக்கும் நபர் துணியை முககவசம் போல் கட்டி உள்ளார். இவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையர்களின் உருவத்தை பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது காவல்துறையில்  வேகமாக விசாரணை நடத்தும் வகையில் பேஸ் டிராக்கர் மொபைல் அப்ளிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும், தனிப்படை போலீசாருக்கு இந்த மொபைல் அப்ளிகேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கண்காணிப்பு கேமராவில் சிக்கிய ெகாள்ளையர்களின் படத்தை இந்த அப்ளிகேஷனில் செலுத்தி, பழைய குற்றவாளிகள் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே பல குற்ற சம்பவங்களில், இந்த பேஸ் டிராக்கர் அப்ளிகேஷன் காவல்துறைக்கு உதவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மட்டுமல்ல,  வெளி மாநிலங்களில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்கள், அவர்கள் பற்றிய முழு விவரங்கள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது. அதன் மூலம் விசாரணை நடந்து வருவதாக தனிப்படையினர் தெரிவித்தனர். தற்போது செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: