பரவ தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ்; டெல்லியில் ஒருவருக்கு உறுதி.! இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. உரு மாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது.

இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டுப்பயணிகள் வந்திறங்குவதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எனினும்,  இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கர்நாடகாவில் இருவருக்கும், குஜாரத்,மராட்டியத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,   இன்று டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபர் தான்சானியாவில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் டெல்லியில் உள்ள  எல்என்ஜேபி-யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 17 பேருக்கு டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். இவர்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உள்ளதா? என மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: