திருச்சி பொன்மலை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி இருக்கும் தண்ணீரில் மூழ்கிய கார்; தம்பதி உயிர் தப்பினர்

திருவெறும்பூர்: திருச்சி பொன்மலை நார்த் (டி) பகுதியில் ரயில்வே கேட்டிற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி குளித்தலையில் இருந்து மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். நார்த்(டி) ரயில்வே சுரங்கப் பாதையில் தற்போது பெய்த மழையினால் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. கார் அதை கடந்து செல்ல முயன்றபோது தண்ணீரில் மூழ்கியது. இதனால் பதற்றம் அடைந்த 2 பேரும் செய்வதறியாது திகைத்தனர். உடனடியாக அங்கு அருகில் இருந்த சிலர் அவர்களை பத்திரமாக காப்பாற்றினர். பின்னர் தண்ணீரில் மூழ்கிய அந்த காரை மற்றொரு வாகனம் மூலம் போராடி வெளியே இழுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சுரங்கப்பாதையில் கட்டப்பட்ட நாள் முதல் இதுநாள்வரை அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதை கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இனிமேலும் தாமதிக்காமல் இந்த சுரங்கப் பாதையை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் மூட வேண்டும் என ரயில்வே ஊழியர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: