யூனியன் சேர்மன் சவுமியாவின் சொந்த செலவில் நாங்குநேரி அருகே பாசன கால்வாய் சீரமைப்பு

நாங்குநேரி: நாங்குநேரி அருகே 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய பாசன கால்வாயை சீரமைக்கும் பணி யூனியன் சேர்மன் சவுமியாவின் சொந்த செலவில் துவங்கியது. நாங்குநேரி பெரியகுளத்தில் இருந்து கீழேயுள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்ல தனி கால்வாய்கள் இல்லை. இதனால் மதகுகள் வழியாக வெளியேறும் உபரிநீரானது அடுத்துள்ள குளங்களுக்கு செல்வது வழக்கம். இவ்வாறு செல்லும் ஓடைகளும் முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போனது. இதனிடையே நாங்குநேரி பெரியகுளத்தில் இருந்து காரங்காடு உள்ளிட்ட சில குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால் ஏற்கனவே தூர்வாரப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டபோதும் அதில் வரும் தண்ணீர்  போதுமானதாக இல்லை எனத் தெரிகிறது.

மேலும் நாங்குநேரி பெரியகுளத்தில் இருந்து வரும் தண்ணீரை பட்டபிள்ளை புதூர்- தென்னிமலை வழியாக கீழுள்ள குழங்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்க்கால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக மழைநீர் குளங்களுக்கு செல்லாமல் வீணடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து தெரியவந்த நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய  எட்வின், தனது சொந்தசெலவில் பாசன கால்வாயை சீரமைக்க முடிவு செய்தார். அதன்படி  பட்டபிள்ளைப்புதூரில் இருந்து கீழுள்ள குளங்களுக்கு செல்லும் கால்வாயை தூர்வாரும் பணி கடந்த இருநாட்களாக துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணி நிறைவடைந்த பிறகு அக்கால்வாய் வழியாக மிக அதிக அளவில் தண்ணீரை கீழேயுள்ள  குளங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல முடியும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். இந்நிலையில் இப்பணிகளை யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின், சிங்கநேரி ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய எட்வின், சிங்கநேரி ஊராட்சி தலைவர்  முத்துச்சொரணம் சண்முக சுந்தரம் , காரங்காடு மாயகிருஷ்ணன்,  பிரதீப் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். நீண்ட காலத்திற்குப் பிறகு கால்வாயை தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாங்குநேரி ஒன்றிய சேர்மன் சவுமியாஆரோக்கிய எட்வினை அப்பகுதி விவசாயிகள் பாராட்டினர்.

Related Stories: