நெல்லை அருகே அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்: பஞ்சாயத்து முன் குப்பை கொட்டியதால் பரபரப்பு

நெல்லை: அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக குப்பை கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் கிராம பஞ்சாயத்து தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன் இருந்து வருகிறார். கட்சியின் கிளைச் செயலாளர் பதவிக்கு இவர் ஒரு கோஷ்டியாகவும், கதிர்காமன் மகன் பழனிவேல்ராஜன் என்பவர் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதே போல் அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே கட்சியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்ட நிலையில் மாரியப்பன் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவரானார்.

இதனால் இருவருக்கும் இடையே விரோதம் உருவானது. இந்நிலையில் நேற்று காலை கரிவலம் கிராம பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்கள் குப்பைகள் சேகரித்து வைத்திருந்த குப்பை வண்டியை கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தள்ளியபடிச்சென்ற பழனிவேல் ராஜன், திடீரென பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக குப்பைகளை ஒட்டு மொத்தமாக கொட்டிச் சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் சமரசப்படுத்தினர்.

Related Stories: