குழந்தைகள் வேண்டாம்...செல்லப் பிராணியே போதும்!

நன்றி குங்குமம் டாக்டர்

இளைய தலைமுறையினரின் மனநிலை ஜெட் வேகத்தில் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சுதந்திரம், வளர்ச்சி போன்ற காரணங்களைச் சொல்லி சிலர் திருமணமே வேண்டாம் என்றார்கள். சிலர் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இன்னும் சிலரோ ‘குழந்தைகள் வேண்டாம்... செல்லப் பிராணிகள் போதும்’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்று அதிர்ச்சி தகவல்கள் சொல்கின்றன நவீனஉளவியல் ஆய்வுகள்.

மில்லினியல்ஸ் எனப்படும் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருக்கும் இன்றைய தலைமுறை பலவிதங்களிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இவ்வுலகில் ஏற்கனவே பிறந்த கோடிக்கணக்கான குழந்தைகள் பசி, பட்டினியில் வாடிக்கொண்டிருக்கும்போது, சமூகத்தின் கட்டாயத்திற்காக இனப்பெருக்கம் செய்வது அவசியமா என்ற கேள்வியை முன்வைத்து, பிள்ளை பெறுவது அவர்களை வளர்ப்பது, பள்ளிக்கு ஃபீஸ் கட்டுவது போன்ற பெற்றோராக இருக்கும் பொறுப்புகளுக்கு அடிமையாவதற்கு பதிலாக தனித்து சந்தோஷமாக வாழ விரும்புபவர்களாக நினைக்கத் தொடங்கி
விட்டார்கள்.  

அப்படியே வளர்த்தாலும் அவர்கள் நம்மிடம் பாசமாக இருக்கிறார்களா? நாம் ஏன் செல்லப்பிராணிகளை வளர்க்கக்கூடாது? என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிட்டது. அதன் விளைவுதான் இன்று நிறைய செல்லப்பிராணி பெற்றோரை(Pet Parents) பார்க்க முடிகிறது.செல்லப்பிராணிகள் கட்டுப்பாடற்ற அன்பினை அள்ளி வழங்குபவை. நம் கோபத்தை அவற்றிடம் காட்டினாலும், அதை மறந்துவிட்டு அடுத்த நிமிடமே நம் முகத்தை அன்பால் வருடிக்கொடுப்பவை.

நாள் முழுக்க டென்ஷனான வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் நம்மை அன்பால் குளிப்பாட்டுபவை என்றுஇதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள் Pet parents. இந்த மனோபாவம் டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் டிரெண்டாகி வருகிறது என E.Commerce இதழ் சமீபத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த மனநிலை நம் வீட்டு குழந்தைகளுக்கும் வந்துவிடுமோ என்று பல பெற்றோர் பீதியிலும் இருக்கிறார்களாம்!

- என்.ஹரிஹரன்

மாடல் : அன்னப்பூரணி

× RELATED ரம்பூட்டான் ரகசியம்!