படகு உடைந்து நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் உயிர் தப்பினர்

திருவொற்றியூர்: ராட்சத அலையில் பைபர் படகு இரண்டாக உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். எண்ணூர், தாழங்குப்பம்  பகுதியை சேர்ந்த மீனவர் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ரோகித், ஹரிஷ், கோவிந்த் ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அங்கிருந்து, நேற்று காலை கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது  கடல்சீற்றம் காரணமாக ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு தூக்கி வீசப்பட்டு இரண்டாக உடைந்தது.

இதனால், பைபர் படகில் இருந்த மீன்கள் மற்றும்  வலைகள் கடலில் மூழ்கின. இதில், 3 மீனவர்கள் நீச்சலடித்து கரைக்கு திரும்பினர். ரோகித்  என்ற மீனவர் மட்டும் கடலில் சிக்கி உடைந்த படகின் பாகத்தை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடியபடி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

தப்பித்து கரை திரும்பிய மீனவர்கள், அங்கிருந்த மீனவர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வேறு பைபர் படகில் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரோகித்தை மீட்டு  கரைக்கு கொண்டு வந்தனர். கடல் சீற்றத்தினால் பைபர் படகு உடைந்து கடலில் மூழ்கினாலும் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More