3 வாலிபர்களை வெட்டிய தந்தை, மகன்கள் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவுடி அரவிந்தன் (24), கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருமுல்லைவாயல், மேட்டு தெருவை சேர்ந்த ஆகாஷ் (25), கொரட்டூர், காமராஜர் நகரை சேர்ந்த பிரசாந்த் (27), அவரது தம்பி மணி (25) உள்பட உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகிய மூவரும் வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு சென்றனர்.

பின்னர், அங்கிருந்து மூவரும் அம்பத்தூரை அடுத்த பாடிக்கு வந்தனர். இதுபற்றி அறிந்த அரவிந்தனின் தந்தை ரவி, சகோதரர்கள் அப்பன்ராஜ் (32), விவேக் (30) ஆகியோர், பாடி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் மூவரையும் விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினர்.

தகவலறிந்து வந்த கொரட்டூர் போலீசார், படுகாயமடைந்த மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அப்பன்ராஜ் (32), விவேக்(30), ரவி(65) ஆகிய மூவரையும் நேற்று மாலை  கைது செய்தனர்.

Related Stories:

More